கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் சார்பாக நடைப்பெற்ற மாபெரும் மாணவிகள் பேரணி மற்றும் மாநாடு!

IMG-20181224-WA0396

Faceinews Logo - Copy

23-12-2018,  கோவை:

மாணவர்களின் எழுச்சியே, தேசத்தின் வளர்ச்சி என்ற முழக்கத்தோடு தேசம் முழுவதும் உள்ள மாணவ சக்தியை கொண்டு நம் தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லவும், சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தேசம் முழுவதும் பயணிக்கும் மாணவ பேரியக்கமே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

IMG-20181224-WA0405

இதன் அடிப்படையில் “சகிப்பின்மைக்கு விடைகொடுப்போம், ஃபாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்” என்ற தேசிய பிரச்சாரத்தை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆகஸ்ட் மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது. இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் “மாணவிகள் மாநாடு” என்ற தலைப்பில் மாணவிகள் பங்குப்பெற்ற மாபெரும் பேரணி 23-12-2018 ஞாயிற்றுகிழமை மாலை 3 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் ஆத்தியா பிர்தௌஸ் அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்டது. பேரணியானது ஆத்துப்பாலம் ஸ்னோலின் மாநாட்டு திடலுக்கு வந்தடைந்தது.

IMG-20181224-WA0403

பின்னர் மாலை மணிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் தமிழ் மாநில தலைவர் S.முஸ்தபா BE அவர்கள் தலைமையில் மாபெரும் மாநாடு துவங்கியது. இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய துணைத்தலைவர் ஆத்தியா பிர்தௌஸ் அவர்களும், கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில குழு உறுப்பினர் N.பாத்திமா பர்வீன் அவர்களும், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்-ன் மாநில தலைவர் K.I.ஷர்மிளா பானு அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட்-ன் மாநில செயலாளர் M.நாகூர் மீரான் அவர்களும், மற்றும் பேராசிரியர் சுந்தரவள்ளி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

IMG-20181224-WA0401

இதனை தொடர்ந்து மாநாட்டில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் கோவை மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியாக சகோதரி.ரிபானா அவர்கள் நன்றியுரை நிகழ்த்த மாநாடு இனிதே நிறைவடைந்தது.

IMG-20181224-WA0402

தீர்மானம் 1

2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாசிஸ பா.ஜ.க.வை வீழ்த்த அனைத்து மாணவ சக்திகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்!

பாசிஸ பா.ஜ.க. அரசு 2014ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்று வரை தன்னுடைய பாசிஸ சித்தாந்த போக்கையே வெளிப்படுத்திக் கொண்டிருகிறது. நாட்டின் நலனிலோ, நாட்டு மக்களின் நலனிலோ எவ்வித அக்கறையும் காட்டாமல், மக்கள் விரோத நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு, GST வரி, போன்ற நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுபான்மையின மக்களை பசு பாதுகாவலர்கள் என்ற காட்டுமிராண்டிகள் அடித்தே படுகொலை செய்யும் போதும் வாயை திறக்காமல் மௌனியாகவே இருந்து வருகிறார்கள்.

இதனை எல்லாம் பார்த்துக்கொண்டு மாணவர்கள் சகிப்புத்தன்மையோடு இருந்தது போதும் இனிவரும் நாட்களில் சகிபின்மைக்கு விடைகொடுத்து பாசிஸ பா.ஜ.க அரசை வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க அனைத்து மாணவ சக்திகளும் பாசிசத்திற்கு எதிராக ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்று இம்மாநாட்டின் வாயிலாக கேம்பஸ் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கின்றது.

IMG-20181224-WA0398

தீர்மானம் 2

தமிழகத்தில் தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

தாய் மொழி, தாய்நாடு என பெண்களை பெருமைப்படுத்தும் நமது நாடு பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமை அளிக்கும் விஷயத்தில் பின்தங்கி இருப்பதை கள நிகழ்வுகளும், புள்ளிவிவரங்களும் சுட்டிக்காட்டுகின்றன.

கல்வித்துறையில் முன்னேற்றம் அடைந்தாலும், பெண்களுக்கு எதிரான, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள், பாலின பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 83 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது மிகவும் வருந்தத்தக்க செய்தி ஆகும்.

டெல்லி நிர்பயா, திருச்சி தௌபீக் சுல்தானா தொடங்கி நந்தினி, ஹாசினி, ஆசிஃபா, ராஜலட்சுமி ஆகியோரின் பாலியல் வன்கொலைகள், பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு இன்னும் போதிய பாதுகாப்பை உறுதி செய்யாத நிலையில் தான் நாடு உள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

மேலும் இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை ஆபாச பொருளாகவும், காட்சிப்பொருளாகவும் காட்டிக்கொண்டிருப்பதினால் சமூகத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு இவை காரணமாக அமைகிறது. மேலும் பெண்களை ஆபாசமாக காட்டக்கூடிய ஆபாச இணையதளங்களை மிஞ்சும் அளவிற்கு இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாறி இருப்பது சின்னஞ்சிறு குழந்தைகளையும் கூட விட்டுவைக்காமல் வன்புணர்வு செய்வதற்கு காரணமாக இருந்துவருகிறது. இதனால் பள்ளிப் பருவங்களிலேயே இன்றைய மாணவ, மாணவிகள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மதுவினால் ஏற்படும் குற்றச்செயல்கள் ஏராளாமாக உள்ளன.

அதேபோல், அதிகார வர்க்கத்திற்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண் செயற்பாட்டாளர்கள் மிரட்டப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன.

எனவே இத்தகைய நிலையை மாற்றி பெண்களை ஆபாச பொருளாக காட்டக்கூடிய தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும், ஆபாச இணையதளங்களையும் தடை செய்ய வேண்டும். மேலும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பையும், அவர்களுக்குரிய உரிமையையும் வழங்கிட வேண்டும். இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கின்றது.

IMG-20181224-WA0399

தீர்மானம் 3

கல்வியில் பாசிசத்தை திணிப்பதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்!

நமது நாட்டில் கல்வி என்பது அனைத்து தரப்பட்ட மக்களும் சாதி, மத எவ்வித வேறுபாடு இல்லாமல் பழகக்கூடிய பள்ளி, கல்லூரி வளாகங்களில் மத அடிப்படையில் மாணவர்களை பிரிப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. மேலும் புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வருணாசிரம மனு தர்மத்தின் அடிப்படையில் குலக்கல்வியை கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை இன்று மத்திய பாஜக அரசு மேற்கொண்டுவருகிறது. இதனின் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களாக பாசிஸ சிந்தனை கொண்ட நபர்களை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து தமிழக பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் திருப்பூரில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருமதி.சாந்தி அவர்கள் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.ன் துணை அமைப்பான இதிகாச சங்கட சமிதி என்ற அமைப்புடன் இணைந்து திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை கட்டாயமாக வரவைத்து இந்துத்துவா பற்றியும் தற்போதைய அறிவியலுக்கு புறம்பான நச்சுக்கருத்துக்களை கூறும் வகையில் அந்த பயிற்சி முகாமை நடத்தியுள்ளனர். இவ்வாறு பாசிஸ சிந்தனையுடன் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் திருமதி.சாந்தி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். அதே போல் கல்வியிலும், கல்விக்கூடங்களிலும் பாசிஸ சிந்தனையை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை கேட்டுகொள்கின்றது.

IMG-20181224-WA0400

தீர்மானம் 4

சமத்துவமற்ற நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும்!

மத்திய அரசு தேசம் முழுவதும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு CBSE பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை கடந்த வருடம் நடைமுறைப்படுத்தியது. இந்த நுழைவுத் தேர்வால் கடந்த வருடம் தமிழகத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி 12 ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே இவ்வருடமும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் 12 ம் வகுப்பில் 1125 எடுத்த விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

பிரதீபா கடந்த வருடம் 12ம் வகுப்பு முடித்த நிலையில் நீட் தேர்வு எழுதி 155 மதிப்பெண் பெற்றார்.தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி இருந்தும் போதிய பொருளாதார வசதியின்மையால் ஒரு வருடம் காத்திருந்து மீண்டும் தேர்வெழுதினார்.
ஆனால் இந்த தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அதே போல் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் தான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு கலைந்ததன் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். இந்த படுகொலைக்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்பேற்று இழப்பீடு என்று மட்டும் இல்லாமல் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடமாக வலுத்து வருகிறது.

உயர் சாதி வர்க்கத்தினர் அதிகமாக பயிலக்கூடிய CBSE பாடத்திட்டத்தின் கீழ் வினாத்தாளை தயார் செய்து மாநிலக்கல்வியின் கீழ் பயின்ற மாணவர்களால் இந்த தேர்வை எதிர்கொள்வதென்பது பெரும் சவாலான ஒன்றாகும். இத்தகைய செயலை கல்வியில் வருணாசிரம கொள்கையை புகுத்துவதாகவே கேம்பஸ் ஃப்ரண்ட் கருதுகிறது. மேலும் நீட் தேர்வினால் மனித உரிமை மீறலும் நடைபெறுகிறது. இதன் மூலம் இந்த நுழைவுத் தேர்வு சமத்துவமற்று நடைபெறுகிறது என்பது தெளிவாகிறது. எனவே சமத்துவமற்ற நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும் என இம்மாநாடு மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றது.

IMG-20181224-WA0404

தீர்மானம் 5

சுற்றுச்சூழலுக்கும், மனித உயிருக்கும் ஆபத்தான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்!

சுற்றுச் சூழலுக்கும் மனித உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தில் மாணவி ஸ்னோலின் உட்பட விலைமதிப்பில்லாத 13 உயிர்கள் பறிக்கப்பட்ட பிறகு ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை காரணம் காட்டி இழுத்து மூடியது.

இந்நிலையில் தமிழக அரசின் தடையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியதில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தடையில்லை என்றும் மூன்று வாரத்திற்குள் ஆலை இயங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பாணை வெளியிடவும் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் நிராகரிக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது. பல ஆண்டுகளாக சுற்றுச் சூழல் கழிவுகளை அகற்றவில்லை, நிறைய விஷயங்களுக்கு அனுமதி வாங்கவில்லை என்பது உள்ளிட்டவை குழுவின் அறிக்கையிலேயே இருக்கும்போது ஆலையை இயக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிய விதம் தவறானது, கொள்கை முடிவெடுத்து மூடுவது தான் நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என அனைத்து அரசியல் கட்சிகளும், சட்ட வல்லுனர்களும் கூறிய போதும் அதனை தமிழக அரசு செவிமடுக்காது வெறும் அரசாணை வெளியிட்டு மூடியதன் விளைவு இன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நலனுக்கு எதிரான பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் தமிழக அரசின் மெத்தனப் போக்கினை கேம்பஸ் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய தீர்ப்பு மீண்டும் மக்களை போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளுவதாகவே அமையும் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டுகின்றது.

ஆகவே, பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்வதோடு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

IMG-20181224-WA0397

தீர்மானம் 6

கோவையில் மாணவிகளுக்கான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்!

தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை சமீப காலமாக அரசு பள்ளிகளில் பல திட்டங்களை கொண்டுவந்து அதனை செயல்படுத்தி மாணவ, மாணவிகளின் படிப்பை உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு கொண்டு செல்ல முயற்சிப்பதனை இம்மாநாடு வரவேற்கிறது. மேலும் பல அரசுப்பள்ளிகள் மூட இருப்பதாக பல்வேறு தகவல்கள் வந்த வன்னம் உள்ளது. எனவே சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய பள்ளிகல்வித்துறை கூடுதல் கவனம் எடுத்து மூட இருக்கக்கூடிய பள்ளிகளை மூடாமல் மாணவ, மாணவிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் கேட்டுகொள்கின்றது.

மேலும் தரமான கல்வி மற்றும் கல்வி நிலையங்களுக்கு பெயர் போன கோவை மாவட்டத்தில் மாணவிகள் தரமான இலவச பள்ளிக்கல்வியை பெற்றிட ஏற்கனவே இருக்கும் மகளிர் உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைபள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும். மேலும் கரும்புக்கடை, ஆத்துபாலம், போத்தனூர் பகுதிகளில் உள்ள மாணவிகள் தங்களுடைய மேல்நிலை படிப்புகளுக்கு பிறப்பகுதிகளுக்கு சென்று வர சிரமமாக உள்ளதால் இவர்கள் இருக்கும் பகுதிகளிலே மேல்நிலை பள்ளிகள் அமைக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றது.

தீர்மானம் 7

அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அறிவை மேம்படுத்த அறிவியல் துறைசார் நூலகம் கோவையில் அமைக்கப்பட வேண்டும்!

மாணவ, மாணவிகள் தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்ககூடிய நூலகங்கள் கோவையில் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே மாணவர்கள் நூலகங்களுக்கு செல்ல முடியாத சூழல் இருந்து வருகிறது இதனை போக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அறிவை மேம்படுத்தகூடிய அறிவியல் துறைசார் நூலகம் அதிக இடங்களில் அமைக்கப்பட வேண்டும் என இம்மாநாடு அரசிற்கு வலியுறுத்துகிறது.

 

Faceinews.com