பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தும் குறும்படம் ‘ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்…’

WhatsApp Image 2018-10-01 at 22.02.33
Faceinews Logo - Copy
பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் என்ற பெயரில் அறிமுக இயக்குநர் ஸ்ரீஷான் என்பவர் தயாரித்து இயக்கிய குறும்படமொன்று நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான வெளியீட்டுவிழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தொழிலதிபரும், சமூக சேவகருமான கே வி எஸ் சரவணன், திருமதி சரவணன், திருமதி வித்யா, திருமதி வாசுகி, சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
முதலில் ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் என்ற குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் நடைபெற்ற விழாவில் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட படக்குழுவினரை மனதார பாராட்டினார்கள்.
சமூக சேவகியும் தொழிலதிபருமான திருமதி சரவணன் பேசுகையில்,‘ புற்றுநோயை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை நாம் தவிர்க்கவேண்டும் என்பதை இந்த குறும்படம் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. தினசரி வாழ்க்கையில் நாம் தெரிந்தே பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்த குறும்படம் ஆழமாக உணர்த்தியுள்ளது. கார்த்திக் எப்படி செத்தான்? கார்த்திக் எப்படி செத்தான்? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே பயணிக்கிறான் கதையின் நாயகன். அவன் பிளாஸ்டிக் கப் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் என நம்முடைய தினசரி வாழ்க்கையில் அங்கமாகிவிட்ட பிளாஸ்டிக்கை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதால் தான் கார்த்திக் செத்தான் என்ற விடையை ஹீரோ தேடி கண்டுபிடிக்கும் போது நாமும் அதிர்ச்சியடைகிறோம். இதனால் இன்று முதல் நான் ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன். இனிமேல் ஒரு போதும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறேன். முதலில் நான் இதில் உறுதியாக பயணித்தபிறகு மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவிருக்கிறேன். இந்த குறும்படத்தை பார்த்த பார்வையாளர்களான நீங்களும் இதனை பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதேப்போல பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தும் வீடியோ ஆல்பத்தின் இசையும், பாடல் வரிகளும் நன்றாக இருந்தது. இந்த படக்குழுவினரின் சமூக அக்கறையை மனதார பாராட்டுகிறேன். ’ என்றார்.
 
படத்தை தயாரித்து இயக்கிய இயக்குநர் ஸ்ரீஷன் பேசுகையில்,‘குறும்படத்தை தயாரித்து இயக்கவேண்டும் என்று முடிவெடுத்தவுடன் சமுதாயத்திற்கு தேவையான விசயத்தைத் தான் மையக்கருவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். அத்துடன் என்னுடைய கல்லூரி நாட்களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தியே இந்த குறும்படத்திற்கான திரைக்கதையை அமைத்தேன். 
 
2016 ஆம் ஆண்டில் சென்னையை தாக்கிய வர்தா புயலன்று இந்த குறும்படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தோம். ஆனால் வெளியாவதில் தாமதமாகிவிட்டது. இடையில் தமிழக அரசு 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதனை நாங்கள் எங்களுடைய கிடைத்த முதல்வெற்றியாகவே பார்த்தோம். இருந்தாலும் மக்கள் இன்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருவதை பார்க்கிறோம். குறிப்பாக டீக்கடைகள் மற்றும் சாதாரண உணவகங்களில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகிறார்கள். இது உடல் நலத்திற்கு தீங்கானது என்று தெரிந்தும் மக்களும் பயன்படுத்துகிறார்கள். இதனை முற்றாக தவிர்க்கவேண்டும் என்பதை உணர்த்தவே ‘ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் ’ என்ற பெயரில் குறும்படத்தை உருவாக்கியிருக்கிறோம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் நீங்கள் சாப்பிடும் சூடான டீ, காபி அல்லது ஜில்லென்று இருக்கும் ஜுஸ் இதனை பிளாஸ்டிக் கப்புகளில் பருகவேண்டாம். இதனால் உங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உறுதி என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறோம். அதே போல் இதனை ஒரு வீடியோ ஆல்பமாகவும் உருவாக்கியிருக்கிறோம்.’ என்றார்.
Faceinews.com