தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு என அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு !
அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார் !! இன்று (08.10.2018) தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் ரூ.55 இலட்சம் மதிப்பில் இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு என பிரத்தியேக அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பின்னர் பேசிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் அரசில் அனைவருக்கும் அனைத்து விதமான சிகிச்சைகளும் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் உயர்தர சிகிச்சையான இருதய மாற்று, கல்லீரல் மாற்று, நுரையீரல் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளும் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த விளிம்பு நிலையில் நோயாளிகளுக்கு இருதய மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு. இந்த இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னர், நோய் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அதனை தவிர்ப்பதற்காக சர்வதேச தரத்திலான கிருமிநாசினி இல்லாத தானியங்கி கதவுடன் கூடிய பிரத்தியேக அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது. இங்கு ரூ,1.00 கோடி மதிப்பிலான இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கருவி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரியில் 1957-ல் துவங்கப்பட்ட இருதயம் மற்றும் நுரையீரல் துறை 2018-ல் நிறுவனமாக மேம்படுத்தப்பட்டு மாதம் ஒன்றுக்கு 250 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
இத்துறையில் இருதயத்தில் உள்ள துவாரங்கள் சரி செய்தல் ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வுகள் சரி செய்தல் மற்றும் மாற்றுதல், இருதய இரத்த நாளங்கள் மற்றும் மகா தமனியில் உள்ள அடைப்பை சரி செய்தல் நுரையீரலில் பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுதல் நுண்துளை வழியாக மேலே குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது. சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சை 2009 -ல் வெற்றிகரமாக செய்யப்பட்டு இதுவரை 8 இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரூ.28 கோடி இத்துறை ஈட்டியுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் மரு. எட்வின் ஜோ, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ஜெயந்தி, இருதய மாற்று மற்றும் நுரையீரல் துறை தலைவர் மரு. மாரியப்பன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.