“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!” -‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம்!

IMG-20210219-WA0070

Faceinews Logo - Copy

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!”

-‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம்

 

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக ‘செம திமிரு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

 

நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா.

IMG-20210219-WA0071

வரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு (17.2.2021) இன்று சென்னையில் நடந்தது.

 

சந்திப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, படத்தின் கதையாசிரியர் அருண் பாலாஜி, தயாரிப்பாளர் எஸ்.சிவா அர்ஜூன் படத்தை தமிழில் வெளியிடுகிற ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஆக்ஷன் கிங் அர்ஜூன் பேசும்போது, ”துருவா என் தங்கச்சியோட மகன். முறைக்குதான் அவர் எனக்கு மருமகனே தவிர, அவரும் எனக்கு மகன் மாதிரிதான். துருவாவோட, அண்ணன் சிரஞ்சீவி சர்ஜா. அவருக்கு நடிக்க வர்றதுல ஆர்வம் இருந்துச்சு. அதுக்கேத்தபடி அவரை உடற்திறன், கராத்தே, பாக்ஸிங், பாம்பேல நடிப்புப் பயிற்சின்னு நல்லா டிரெய்ன் பண்ணேன். ஆனா அவர் எங்களை விட்டுப் போய்ட்டார்ங்கிறது வேதனையான விஷயம். சிரஞ்சீவிக்கு பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்த காலகட்டத்துல, துருவா தனக்கும் நடிக்க ஆர்வம் இருக்குன்னு வந்தார். அதுவும் ஹீரோவா நடிக்கணும்கிற ஆர்வத்தோட வந்தார். ஹீரோவாகுறதுக்கு முன்னே நடிகன் ஆகணும். ஆனா, அதெல்லாம் சுலபம் இல்லை. நீ சின்னப்பையன். இப்போ இதெல்லாம் வேண்டாம்’னு அட்வைஸ் பண்ணேன். அதையெல்லாம் தாண்டி அவர் யார்கிட்டேயும் எந்த உதவியையும் எதிர்பார்க்காம தனக்குத்தானே குருவா இருந்து, தானே ஒரு ஸ்கிரிப்ட் பண்ணி, தானே டைரக்ட் பண்ணி, நடிச்சு ஒரு சி.டி.யில பதிவு பண்ணி கொண்டு வந்தார். பார்த்து அசந்துபோனேன்.

 

அவர், ஃபீல்டுக்குள்ள வந்து படங்கள் நடிச்சு பெயரைச் சம்பாதிச்சது அப்படித்தான். ஏழு வருஷத்துல மூன்று படங்கள்தான் நடிச்சிருக்கார். அத்தனையும் ஹிட். நிறைய படங்கள் நடிக்கணும்கிறதை விட நல்ல படங்கள் நடிக்கணும்கிறதுல உறுதியா இருக்கார். பணம் சம்பாதிக்கிறதைவிட பெயரைச் சம்பாதிக்கணும்கிற எண்ணம் இருக்கு. அதுக்காக ரொம்பவே அர்ப்பணிப்போட ஒவ்வொரு விஷயத்தையும் பண்றார்.

 

இந்த செம திமிரு படமும் அவருக்கு பெரியளவுல பெயர் வாங்கிக் கொடுக்கப் போற படமா இருக்கும். இந்த படத்துக்காக இரண்டரை வருஷம் கடுமையா உழைச்சிருக்கார். படத்துல 16 வயசுப் பையன், நல்லா வளர்ந்த இளைஞன்னு ரெண்டு விதமா வர்றார். சிறுவயது தோற்றத்துல நடிக்கிறதுக்காக 40 கிலோவரை எடை குறைச்சார். அந்தளவு நடிப்பு மேல ஈடுபாடு. படத்துல சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடின்னு எல்லாம் இருக்கும். ஆக்ஷன் ரொம்பவே தூக்கலா இருக்கும்.

 

படத்தோட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சில சர்வதேச ‘பாடி பில்டர்ஸ்’ நாலு பேர் நடிச்சிருக்காங்க. அந்த காட்சிகள் படு அசத்தலா, ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும்” என்றார்.

 

துருவா சர்ஜா பேசும்போது, ”அர்ஜுன் மாமாவோட வழிகாட்டலோடத்தான் நான் என்னோட ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்கிறேன். மாமா எனக்கு பொய் சொல்லக்கூடாதுங்கிற அட்வைஸ்ல ஆரம்பிச்சு, இந்த ஃபீல்டுல நிலைச்சு நிக்கணும்னா எதையெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லிக் கொடுத்தார். இந்த படத்துல என்னோட முரட்டுத்தனமான தோற்றத்தை பார்த்து புகழுறாங்க. ஆனா, அர்ஜூன் மாமாவோட ஒப்பிட்டா நான் ஒண்ணுமேயில்லை.

 

படத்துல என்னோட டான்ஸுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு தெரியுது. படத்துக்காக நான் டான்ஸ் கத்துக்கலை. அதுக்குப் பதிலா ஜிம்னாஸ்டிக் கத்துக்கிட்டு ஆடியிருக்கேன். எல்லாத்தையும்விட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ரொம்பவே ரசிப்பீங்க” என்றார்.

 

படத்தில், சர்வதேச உடற்திறன் சாம்பியன்கள் கைக்ரீன் (Kai green), மோர்கன் அஸ்தே (Morgan Aste), ஜான் லூகாஸ் (John Lucas), ஜோய்லிண்டர் (Joe linder) என நான்கு பேர் நடித்துள்ளனர். அவர்களில் ஜான் லூகாஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ”பாரம்பரியத்துக்கும் கலாசாரத்துக்கும் பேர்போன இந்தியாவுக்கு வந்தது, இந்தியப் படத்துல நடிச்சது பெருமையா இருக்கு” என்றார்.

 

இந்த படத்தை ‘ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட்’ T.முருகானந்தம் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார். இப்படத்தை பி.கே.கங்காதர், எஸ்.சிவா அர்ஜூன் தயாரித்துள்ளனர். ஓளிப்பதிவை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் கையாண்டுள்ளார், இசை சந்தன் ஷெட்டி.

Faceinews.com