டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்திய `நீரிழிவு நோயாளிகள் 100 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியம்’

3D9A8113

Faceinews Logo - Copy

டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்திய `நீரிழிவு நோயாளிகள் 100 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியம்’
நிகழ்ச்சி இம்மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வு கட்டுரையையும் வெளியிட்டது

சென்னை, டிசம்பர், 2019: `நீரிழிவு நோயாளிகள் 100 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியம்’ என்னும் நிகழ்ச்சியை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின்போது அம்மையம் இது தொடர்பாக சமீபத்தில் நடத்திய ஆய்வு பற்றிய தகவல்களையும் வெளியிட்டது.

3D9A8039

சரியான உடல்நல பராமரிப்பு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை காரணமாக 325க்கும் மேற்பட்ட இந்தியர்கள் 90 வயதை தாண்டி நீரிழிவு நோய் இருந்தபோதிலும் நிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தனர் என்பதைக் காட்டும் ஒரு வரலாற்று தருணமாக இந்த நிகழ்ச்சியை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் நடத்தியது.

இந்திய அளவில் நீரிழிவு சிகிச்சையில் முன்னணி மருத்துவமனையாக திகழும் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு கட்டுரையை நினைவுகூறும் வகையில், `நீரிழிவு நோய் இருந்தாலும் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்வது சாத்தியம்’ என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோயை வெற்றிகரமாக எதிர்த்து போராடிய 90 முதல் 99 வயதிலான நபர்கள் பாராட்டப்பட்டனர். மேலும் அவர்கள் நீரிழிவு தொடர்பான சவால்களை எவ்வாறு வெற்றிகரமாக முறியடித்தார்கள் என்பது குறித்து தங்கள் அனுபவத்தை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்த டாக்டர் எஸ்.வி. சிட்டிபாபு 60 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வாறு நீரிழிவு நோயை சமாளித்து நிர்வகித்து வருகிறார் என்பது குறித்த வீடியோ இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 90 வயது முதல் 99 வயதிலான நபர்களும் நீரிழிவு மேலாண்மை குறித்த தங்களின் கருத்துக்களை பகரிந்து கொண்டனர். இந்த எழுச்சியூட்டும் செய்திகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு 100 வயது வரை ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை தரும், இது அவர்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
“2-ம் வகை நீரிழிவு நோயுடன் தென்னிந்திய நீரிழிவு மையத்தில் காணப்படும் வயதான நோயாளிகளின் மருத்துவ சுய விவரம் (90 வயதிற்கு மேல்)” என்னும் தலைப்பில் நீரிழிவு தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை முறைகள் என்னும் பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தக்கட்டுரை டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் மருத்துவ பராமரிப்பு குழு மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் மருத்துவ தொற்றுநோயியல் குழு ஆகியோரின் கூட்டு முயற்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவரும் தலைமை நீரிழிவு நோய் நிபுணரும், மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குனரும் நீரிழிவு ஆராய்ச்சித்துறை தலைவருமான டாக்டர் வி. மோகன் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் 100 வயது வரை வாழ முடியும் என்று யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். நாங்கள் மருத்துவ மாணவர்களாக இருந்தபோது அவ்வாறு எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. மேலும் நீரிழிவு நோயாளிகளின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைகிறது என்பதற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளது. இந்தியாவில் ஆண்களுக்கு 67 ஆண்டுகளும், பெண்களுக்கு 69 ஆண்டுகளும் ஆயுட்காலமாக உள்ளது. இந்த நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் 60 வயது முதல் 70 வயதுக்கு அப்பால் உயிர் வாழ்வது என்பது மிகக் கடினமாக இருக்கும் என்று கற்பனை செய்வார். ஆனால் காலப்போக்கில் சிறந்த சிகிச்சை முறை, நோயாளிகள் டாக்டர்களின் ஆலோசனைகளை பின்பற்றுதல் ஆகியவற்றின் காரணமாக நீண்ட காலம் வாழ்வதை நாம் பார்க்கத் தொடங்கினோம். தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 325க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு 25 முதல் 30 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தும் 90 வயதை தாண்டி தங்கள் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர் என்பதை எங்கள் கட்டுரையில் வெளியிட்டுள்ளோம்.

இந்த பட்டியலில் பலர் 95 வயதைத் தாண்டியும், அதில் ஒருவர் 100 வயதை தொட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த நோயாளிகளில் பலருக்கு 50 முதல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது. இதன்மூலம் ஒருவரின் ஆயுட் காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்படாது என்பது தெரிய வருகிறது. மேலும் அவர்கள் நீரிழிவு நோய் இருந்தபோதிலும் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முயற்சி செய்ய வேண்டும். இதற்கு தேவை சில ஒழுக்கமான நடைமுறை, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் வழக்கமான மருத்துவ ஆலோசனை ஆகியவை வேண்டும். உண்மையில், நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களைக் கவனித்துக் கொண்டால் நீரிழிவு இல்லாதவர்களை விட நீண்ட காலம் வாழ முடியும் என்று நான் சொல்வேன் என்று பேசினார்.
நீரிழிவு நோய் தொடர்பான பயத்தையும் அது தொடர்பான சிக்கல்களையும் சமாளிக்கும் வகையில் எழுச்சியூட்டும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது. இந்த ஆய்வும் நிகழ்ச்சியும் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, ஆரம்ப கால நோய் அறிதல் மற்றும் சிகிச்சை, வழக்கமான சோதனைகள், ஒழுக்கமான நடைமுறைகளை பின்பற்றினால் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என்பதை காட்டியது. நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட முதல் 10 முதல் 15 ஆண்டுகள் மிக முக்கியமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நீங்கள் முதல் 10 முதல் 15 ஆண்டுகளில் உங்கள் நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தினால், உங்கள் வாழ்நாளில், அதன் காரணமாக எந்த சிக்கலும் பிரச்சினையும் ஏற்படாது என்பதை உறுதியாக நம்பலாம்.

Faceinews.com