அதிகரிக்கும் கொரோனா தொற்று- கொடைக்கானல் வரும் வெளி மாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம்!

IMG-20210312-WA0036

Faceinews Logo - Copy

அதிகரிக்கும் கொரோனா தொற்று- கொடைக்கானல் வரும் வெளி மாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம்.

 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக சராசரி பாதிப்பு 18 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2-வது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளை கடந்து வருபவர்களால் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள். தற்போது கடந்த 1 வாரத்துக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் இருந்தனர்.

 

மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வந்தாலும் வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனைச்சாவடியில் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

 

24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். கொரோனா இல்லை என்ற சான்று வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல் இ-பாஸ் வைத்துள்ள வெளி மாநிலத்தவர் மட்டுமே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை செய்து நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

 

இருந்தபோதும் தற்போது தேர்தல் பணிகளுக்காக வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சென்று விட்டதால் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் மருத்துவ முகாம் பணியிலும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

 

இதே போல தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய பகுதிகளிலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இ-பாஸ் இல்லாமல் தமிழகத்துக்குள் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வாகன ஓட்டுனர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்படுகிறது.

Faceinews.com