“இன்பினிட் சேவா” – தனித்துவமான டிஜிட்டல் சேவை சென்னையில் தொடக்கம்

“இன்பினிட் சேவா” – தனித்துவமான டிஜிட்டல் சேவை சென்னையில் தொடக்கம்

சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட மூன்று தனித்துவமான சேவைகளை வழங்கும் “இன்பினிட் சேவா” (Infinite Seva) என்ற இணையதள அமைப்பு சென்னையில் தொடங்கியது.

இதன் முப்பரிமாண இயக்கமாக

(1) “பிரேரணா ஹெல்ப்லைன் அறக்கட்டளை” – தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பயனாளிகளிடையே பாலமாகச் செயல்படுதல் ,

(2) “தமிழ்நாடு சேவா அறக்கட்டளை” – கிராம வளர்ச்சிப்பணிகள் மற்றும் குறிப்பாக கோவில்களில் தினமும் பூஜைகள் நடைபெறுவதற்காக அதற்கென முன்வருபவர்களை மற்றும் தன்னார்வலப் பணியாளர்களை ஒருங்கிணைத்து அதை உறுதிசெய்தல்,

(3) “இன்பினிட் விஷன் இந்திய அறக்கட்டளை” – தொழில்முனைவோருக்கான கட்டமைப்பு மற்றும் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கான மாற்றத்தை உருவாக்குதல் ஆகிய மூன்று பணிகளைச் செய்வதற்காக ‘இன்பினிட் சேவா ‘அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது..

இன்ஃபினிட் சேவாவின் கீழ் இயங்கும் அமைப்புகள்:

பிரேராணா ஹெல்ப்லைன் அறக்கட்டளை, நன்கொடை அளிக்க முன் வருபவர்கள் மற்றும் வருட லாபத்தில் 2 சதவிகிதத்தை சமுதாயப் நற்பணிகளுக்காக வழங்கும் நிறுவனங்கள் ஆகியோரை நன்கொடை பெற விழையும் தொண்டு நிறுவனங்களுடன் இணைக்கும் பாலமாகச் செயல்படுவதே இந்த அமைப்பின் பணியாகும். இதன் மூலம் நிதி சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் சேவை மனப்பான்மை மற்றும் சமூக ஈடுபாடு ஊக்குவிக்கப்படுகிறது. உதவி தேவைப்படும் தனிநபர்கள், அவர்களின் தேவைகளுக்குத் தகுந்த தீர்வுகளைப் பெற வழி காட்டுவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

கிராமப்புற வாழ்வாதார வளத்திற்கான உதவிகள் செய்ய முன்வருபவரையும் உதவிகள் கோருபவரையும் ஒருங்கிணைக்கும் பணிகளை இந்த இணைய (டிஜிட்டல்) தளம் செயல்படும்.

தமிழ்நாடு சேவா அறக்கட்டளை – : தமிழ்நாட்டில் உள்ள மிகப்பழைமை வாய்ந்த கோவில்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பணிகள் செய்வதற்கும் , தினசரி பூஜைகள் நடத்தப் போதுமான வசதி இல்லாத மிகப் பழமையான கோவில்களுக்கு உதவிடவும், அவற்றைச் செய்ய முன்வருவோரை ஒருங்கிணைக்கும் வகையில் இன்பினிட் சேவா இணைய (டிஜிட்டல்) தளம் பணியாற்றும். இந்த இணைய தளத்தின்மூலம் கோவில்களில் தினசரி பூஜைகள் நடத்த நிதியுதவி வழங்கும் பக்தர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்கள் தங்களின் நன்கொடைகளை அவர்கள் விரும்பும் கோவிலுக்கு உரிய காலத்தில் வழங்கி ஆன்மீக அனுபவம் பெற இயலும். உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரை கோவில் பராமரிப்பில் பங்கேற்க வழிவகை ஏற்படுத்தப்படும். இதன் மூலம் தினசரி பூஜைகள் சரியான முறையில் செய்யப்படுவதை உறுதி செய்வதோடு, பக்தர்களிடையே கூட்டுப் பொறுப்புணர்வு ஏற்படுத்தவும் இயலும். ஒவ்வொரு கோவிலின் வரலாறு, தெய்வ விக்கிரகங்கள் மற்றும் தல புராணம் ஆகிய தகவல்களைக் கொண்ட விரிவான ஆவணங்கள் உருவாக்கவும் இன்பினிட் சேவா அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இன்ஃபினிட்டி விஷன் இந்தியா அறக்கட்டளை – தொழில் இணைப்பு இணைய தளமான இது தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விவாதிக்கவும், அவற்றைத் தீர்க்கும் விதமாக ஆராய்ச்சி மேற்கொள்ளவும், பல்வேறு தளங்கள் மூலம் நிபுணத்துவம் பெறவும், முதலீடு செய்யவும் வழிவகை ஏற்பட உதவும் அமைப்பாகும்,

இதன் மூலம்,எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யும் தலைவர்கள் உருவாக ஊக்கப்படுத்தப்படும். திறன் மேம்பாட்டு பட்டறைகள், பயிற்சி அமர்வுகள், ஆதரவு திட்டங்கள் மற்றும் அறிவு பகிர்வு நிகழ்வுகள் போன்றவை தொடர்ந்து நடத்தப்படும். புதுமையான யோசனைகள் பிறப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும்.

சமூக நலனுக்காக பல்வேறு நிறுவனங்களின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு திட்டப் (CSR) பயன்கள் மிகச்சரியான நபர்கள் / நிறுவனங்கள் பெற வழியேற்படும்.
இன்பினிட் சேவா அமைப்பு தனது திட்டப்பணிகளை தொடங்கும் பிரமாண்ட விழா சென்னையில் நடைபெற்றது.

சமூகங்களை மேம்படுத்துதல், நேர்மறையான மாற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாட்டில் கிராம முன்னேற்றம் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான பணிகளைத் தொடங்கியுள்ள இன்பினிட் சேவாவின் முயற்சிகள் இந்தியாவில் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் துவக்க விழாவில் வரவேற்புரையாற்றிய இவ்வமைப்பின் நிறுவனர் திருமதி நளினி பத்மநாபன், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோவில்கள் உள்ளன, அவற்றில் சற்றேறக்குறைய 40000 கோவில்கள் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படுகின்றன. பல்லாயிரம் கோவில்கள் ஒருவேளை பூஜையில்லாமல் பூட்டிக்கிடக்கின்றன. அவற்றில் தினமும் விளக்கேற்றி பூஜை செய்ய மாதம் ஒன்றுக்கு ரூ.15000/- முதல் ரூ.20000/- வரை செலவாகும்.

இத்தகைய கோவில்களின் பட்டியலை இன்பினிட் சேவா இணையதளத்தில் பதிவிட்டு ஒவ்வொரு கோவிலையும் பராமரிக்க முன் வருவோரையும் அதே பகுதியிலுள்ள தன்னார்வலர்கள் மூன்று பேரையும் இணைத்து கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுவதை இந்த அமைப்பு உறுதிப்படுத்தும். கோவிலின் மாத வரவு செலவு கணக்கினைப் சரிபார்க்க அதே பகுதியில் வேறு மூன்று தன்னார்வலர்கள் சேவைப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்ர்கள். இந்நாள்வரை 20 கோவில்கள் அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்குள் இந்த எண்ணிக்கை 100 ஆக உயரும் என்றார்.
அதேபோல் இன்பினிட் சேவா அமைப்பு நன்கொடைகள் வழங்க விழையும் நிறுவனங்களை பதிவு செய்த பிறகு நிதியுதவி தேவையென்று பதிவிட்டோருடன் இணைக்கும். ஒருவர் ரூ.1 லட்சத்தை முதியோர் இல்லத்திற்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்கின்றபோது அத்தகைய உதவி தேவைப்படும் நிறுவனங்களின் முகவரியை இவ்விணைய தளத்தின்மூலம் பெற்று உதவி கேட்பவருக்கே நேரடியாக பணம் அனுப்ப முடியும். என்று கூறுனார்.

வாழ்த்துரை வழங்கிய இந்திய ஆட்சிப் பணித்துறை முன்னாள் அதிகாரி முனைவர் எம் ராஜாராம் IAS, கடவுள் எல்லையற்றவர், சேவையும் எல்லையற்றது. இன்பினிட் சேவா என்னும் இந்த அமைப்பு எல்லையற்ற சேவைகளைப் புரியத் தொடங்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் அரசர்கள் கோவில் திருப்பணியைச் செய்தார்கள், இன்று மக்கள் அவசியம் செய்ய வேண்டிய பணிகள் இவை என்றும், கேரள மாநிலத்தை கடவுளின் சொந்த நாடு என்று சொல்லும்போது, தமிழ்நாட்டை கடவுளின் இருப்பிடம் என்று சொல்ல வேண்டும் என்றார். மேலும் அவர் பேசும்போது உழவாரப் பணிகளை அறநிலையத்துறை தொடங்கியதை நினைவுகூர்ந்து, கோவில் என்பது வழிபாட்டுத் தலமட்டுமல்ல, அக்காலத்தில் கோவில்களின் வருவாய் வணிகம் செய்வதற்காக கடனாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும் கற்றல் மையங்களாக, கலைகளை வளர்க்கும் இடங்களாக கோவில்கள் திகழ்வதையும் குறிப்பிட்டு இத்தகைய பணிகள் மூலம் மேலும் வாழ்க்கையின் ஒளியைக் கூட்ட முடியும் என்று கூறினார்.

தானே முன்மாதிரியாக மதுரை மாவட்டம் சாப்டுரில் உள்ள மிகப் பழமையான கும்பேஸ்வரன் ஆலயத்தைப் புனரமைத்து தினமும் பூஜை நடை பெறுவதை உறுதி செய்து, பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து இறைவழிபாடு செய்யும் பணியைக் குறிப்பிட்டு தனது உரையைத் துவக்கிய கனரா வங்கியின் முன்னாள் இயக்குநரும் 369 சேம்பர் கம்பெனியின் நிர்வாக பங்குதாரருமான திரு.ஜி வி மணிமாறன், ஒரு செயலைச் செய்வதுதான் நம்பிக்கை என்றார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலுள்ள பூமீஸ்வரர் ஆலயத்தின் தின பூஜைக்கு நிதி உதவி வழங்க பக்தர்கள் முன்வந்துள்ளதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இன்னும் குறுகிய நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள 1000 கோவில்கள் ஆன்மீக அன்பர்களின் சேவைக்கு உள்ளாகும் என்றார். இன்பினிட் சேவா இணையத்தளத்தில் தன்னார்வலர்கள் பெருமளவு இணையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘நாம் பெறுவதைக் கொண்டு வாழ்கிறோம், ஆனால் நாம் கொடுப்பதன் மூலம் வாழ்க்கையை உருவாக்குகிறோம்’ என்று வின்சென்ட் சர்ச்சிலின் மேற்கோளுடன் தனது வாழ்த்துரையைத் தொடங்கிய ரூட்ஸ்இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் திரு. சி சிவகுமார், அறப்பணிகளை செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இன்பினிட் சேவா அமைப்பின் மூலம் தொடர் பயனடைவார்கள் என்றும், கல்வி, விளையாட்டு, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கொண்டுவருவது மிகவும் அவசியம் என்றும் கூறினார்.

கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற ஈக்விட்டாஸ் சிறுநிதி வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு, பி.என்.வாசுதேவன், ஒரு அமைப்பு என்றுமட்டுமல்ல ஒரே ஒருவராலும் உலகை மாற்ற முடியும் என்றார். பல அரசு சாரா சேவை அமைப்புகள் (NGOs) தமது பணிகளைத் தொடர முடியாமல் போய்விட்ட காரணம் தொடர்ந்து நிதி ஆதாரம் இல்லாததே என்றும், எந்த ஒரு நிறுவனம் தொடங்குவது என்பதோடு பணிகளைத் தொய்வின்றி தொடர்வதே மிக அவசியம் என்றார். நிதி மேலாண்மையை கற்றுத்தருவது இன்றைய தேவை என்றும், சிறப்பாக வணிகம் செய்வது எவ்வாறு என்று தெரிந்து கொள்பவர்கள், நிதி நிர்வாகத்தைத் புரிந்துகொள்வதில்லை, அதனாலேயே பல நிறுவனங்கள் செயலிழந்துவிடுகின்றன.

இன்பினிட் சேவா அமைப்பு இத்தகைய நிறுவனங்களுக்கு இடைநிறுத்தம் ஏற்படாதவாறு ஒரு மிகச் சிறந்த தளத்தை / நடைமேடையை அமைத்துக் கொடுக்கிறது. இதனால் அரசு சாரா சேவை அமைப்புகளின் பணிகள் தொய்வின்றி நிலையாகத் தொடரும் என்றார்.

இன்பினிட் சேவா அமைப்பிற்கு ஆசி வழங்கி உரையாற்றிய ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி குருவரானந்தாஜி, உடல் தந்த பெற்றோருக்கும், உடனுள்ள உறவுகளுக்கும், இந்த சமுதாயத்திற்கும் நம்மால் இயன்றதைத் திருப்பித் தருவதே நமது தார்மீகக் கடமை என்றார்.

அனைத்து மதங்களிலும் இறைவனை அடையும் உபாயம் இத்தகைய சேவைகளின் வழி வழங்கப்பட்டுள்ளது என்றும், வியாச முனிவரின் 18 புராணங்கள் அவ்வாறே போதிக்கின்றன என்றும் கூறினார்.

இறைவன் நம்முன்னே பார்வை தெரியாதவரின் வடிவத்தில், ஏழையின் ரூபத்தில் வருகின்றார், நாம்தான் அவர்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கென்று புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.

வாழும் தெய்வங்களுக்கான உதவிகள் மிகப்பெரும் தியான வழிபாடாகும். சுவாமி விவேகானந்தரின் போதனைகள் இவையாகும். 1900 ஆம் வருடத்தில் சுவாமி விவேகானந்தர் உறக்கமில்லாமல் தவித்தபோது அதற்கான காரணம் இந்த பூமியின் ஏதோ ஒரு இடத்தில் துன்பத்தில் மக்கள் உழல்வதால் என்னால் தூங்கமுடியவில்லை என்றார்.

அன்றுதான், அந்த நேரம்தான் பசிபிக் பெருங்கடலின் பிஜி தீவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்ற சோகமான நிகழ்ச்சி சுவாமியின் மனதில் பெரும் கவலையை அதே தருணத்தில் ஏற்படுத்திவிட்டது. நம்மை எது இணைத்து, சேவைதான், இதனை அனைவருக்கும் பகிர வேண்டும் என்று கூறி ஆசி வழங்கினார் விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி மைய பல்கலைக்கழக வேந்தர் மருத்துவர் ஏ எஸ் கணேசன், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து சேலம் மற்றும் மதுரை நகரங்களுக்கு சாலை வழியாகப் பயணம் செய்யும்போது பல புராதன கோவில்கள் சிதிலமடைந்து நிற்கும் காட்சிகள் மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது.

என்றும், இத்தகைய கோவில்களைப் புனரமைக்கவும், தொடர்ந்து தினமும் அங்கு பூஜைகள் நடைபெறவும் பலரை ஒருங்கிணைக்கும் பணியை இன்பினிட் சேவா அமைப்பு தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது என்றும், இத்தகைய இணைப்பு ஆன்மீக அன்பர்களின் பெருமகிழ்ச்சிக்கு வித்திடுவதோடு ஆன்மீக சுற்றுலாவின் வளர்ச்சிக்கும் பெரும் பயனளிக்கும் என்றார். தங்களது விநாயகா ஆராய்ச்சி மையம் அமைத்து பராமரிக்கும் 1008 சிவலிங்க கோவில் 20 ஆண்டுகால உழைப்பு என்றார். இன்பினிட் சேவா அமைப்பின் பணிகள் கோடிக்கணக்கான ஆன்மீக அன்பர்களை மகிழ்விக்கும் என்றும் தானும் இந்த அமைப்பில் ஈடுபட்டுப் பணிபுரிவது தனக்கும் பேரானந்தம் என்றும் தெரிவித்தார்.

திரு.ப .சுவாமிநாதன் தொகுத்து வழங்கிய இந்த விழாவின் ஏற்பாடுகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவன (ONGC) முன்னாள் இயக்குநர் திரு. கே.எம். பத்மநாபன் மற்றும் இன்பினிட் சேவா அமைப்பின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தார்.திருமதி. மஞ்சுளா மணி நன்றி கூறினார்.

Faceinews.com