ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை தொடங்கும் நடமாடும் நலவாழ்வு கிளினிக் மெட்ராஸ் வடக்கு ரோட்டரி கிளப் மற்றும் பே ஃபோர்ஜ் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு இந்த முன்னெடுப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகிறது
சென்னை, 17 ஆகஸ்ட், 2024: காவேரி மருத்துவமனை, மெட்ராஸ் வடக்கு ரோட்டரி கிளப் மற்றும் பே ஃபோர்ஜ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான முன்னெடுப்பு திட்டமாக நடமாடும் நலவாழ்வு கிளினிக் (மொபைல் வெல்னஸ் கிளினிக்) என்பதை ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை தொடங்கியிருக்கிறது. வசதியற்ற ஏழை, எளியோருக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் மருந்துகளை வழங்குவதன் வழியாக சென்னையிலும் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலும் உடல்நல சிகிச்சையை பெறுவதில் நிலவும் இடைவெளிகளை நிரப்புவதே இந்த மாபெரும் மகத்தான திட்டத்தின் நோக்கமாகும்.
நடமாடும் நலவாழ்வு கிளினிக் தொடக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. Ma. சுப்ரமணியன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. Dha. வேலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நடமாடும் கிளினிக், அது செயலாற்றும் சமூகங்களில் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் உரிய நேரத்திற்குள் மருத்துவ சேவைகளை வழங்குவது ஆகிய நடவடிக்கைகளின் வழியாக 100,000 அதிகமான நபர்களுக்கு மருத்துவ சேவையின் பலனை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
காவேரி நடமாடும் நலவாழ்வு கிளினிக் என்பது ஈசிஜி, எக்கோகார்டியோகிராம், எக்ஸ்ரேக்கள் மற்றும் பிஎம்டி ஸ்கேனர்கள் உட்பட மேம்பட்ட நோயறிதல் சாதன வசதிகளை உள்ளடக்கிய ஒரு நடமாடும் மருத்துவ கிளினிக் வாகனமாகும். பொது மருத்துவம், நீரிழிவியல், இதயவியல், சருமவியல், சிறுநீரகவியல், நுரையீரலியல், எலும்பியல், புற்றுநோயியல், முதுமை மருத்துவம், மூளை-நரம்பியல் மற்றும் உணவுமுறை ஆலோசனை ஆகிய பல்வேறு சிறப்பு பிரிவுகளில் சேவைகளின் விரிவான தொகுப்பை இந்த நடமாடும் கிளினிக் வழங்கும். மருத்துவ சிகிச்சைக்கு மிக குறைவான அணுகுவசதியே பொதுவாக கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு, அதுவும் குறிப்பாக மாநகரை விட்டு தள்ளி புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, விரிவான சோதனைகளின் வழியாக உடல்நல பிரச்சினைகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உயர்தர மருத்துவ சிகிச்சையை நேரடியாக அவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த நடமாடும் கிளினிக் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒரு மருத்துவமனையில் எதிர்பார்க்கக்கூடிய ஆரம்பக்கட்ட அத்தியாவசிய சிகிச்சை பராமரிப்பு மற்றும் நோயறிதல் சேவைகளை வழங்கும் திறன் கொண்ட நவீன சாதனங்கள் இந்த மொபைல் யூனிட்-ல் இடம்பெற்றுள்ளன. அத்தியாவசிய பரிசோதனைகளை நடத்தவும் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை வழங்கவும் திறன் கொண்ட காவேரி நடமாடும் நலவாழ்வு கிளினிக், உரிய நேரத்திற்குள் மருத்துவ கவனிப்பையும், சிகிச்சையையும் வசதியற்ற ஏழை, எளிய மக்கள் பெறுவதை உறுதி செய்கிறது. நாட்பட்ட தீவிர நோய் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கும் மற்றும் அவற்றை திறம்பட நிர்வகிப்பதற்கும் இச்சேவை மிக முக்கியமானதாகும்.
“நோயறிதல் சேவைகள் மற்றும் சிகிச்சை என்பதையும் கடந்து, உடல் ஆரோக்கியம் குறித்த கல்வியை வழங்குவதில் நடமாடும் நலவாழ்வு கிளினிக் முக்கிய பங்காற்றுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் உள்ளூர் அளவிலான வசதியற்றவர்கள் வசிக்கும் சமூக அமைவிடங்களில் நோய் வராமல் தடுக்கும் முன்தடுப்பு நடவடிக்கைகள் மீது சிறப்பு கவனத்துடன் சமூக விழிப்புணர்வு அமர்வுகளையும் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்களையும் இந்த கிளினிக் நடத்தும். உடல்நலத்தை காப்பதற்காக முன்தடுப்பு ஆரோக்கியம் மீது விழிப்புணர்வை உயர்த்த சமூகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிற இம்மாநிலத்தின் முன்னணி மருத்துவ நிறுவனமான காவேரி மருத்துவமனையோடு இத்திட்டத்தில் ஒத்துழைப்போடு செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்” என்று மெட்ராஸ் வடக்கு ரோட்டரி கிளப்-ன் CSR பிரிவின் தலைவர் ரொட்டேரியன் டாக்டர் பி சதீஷ் கூறினார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை-நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநரான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், இந்நிகழ்வின்போது ஆற்றிய உரையில் கூறியதாவது: “காவேரி நடமாடும் நலவாழ்வு கிளினிக் தொடங்கப்படுவது, எங்களை வளர்த்திருக்கிற சமுதாயத்திற்கு பலனை திரும்ப வழங்கும் எமது ஒரு வழிமுறையாகும். முன்தடுப்பு ஆரோக்கியம் என்பது ஒரு முக்கிய முன்னுரிமை செயல்பாடாக எங்களுக்கு இருக்கிறது; ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பை கண்டறிதல் மீதான விழிப்புணர்வை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி வந்திருக்கிறோம். எனினும், புறநகர் பகுதிகளிலும், ஊரக பகுதிகளிலும் உரிய நேரத்தில் உடல்நல பராமரிப்பும், சிகிச்சையும் இன்னும் குறைவாகவே கிடைக்கிறது. எனவே இச்செயல்திட்டத்தின் மூலம் அந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் முற்படுகிறோம். மக்களின் நிதிசார் அந்தஸ்து, பொருளாதார நிலை எதுவாகயிருப்பினும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தரமான உடல்நல சிகிச்சையை கிடைக்குமாறு செய்வது என்ற இலக்கை நோக்கிய ஒரு முன்னேற்ற நடவடிக்கையாக இத்திட்டம் இருக்கிறது. மிக சிறப்பான உடல்நல சிகிச்சையை பலரும் பெற்று பயனடைவதாக ஆக்க வேண்டுமென்ற எமது தொலைநோக்கு குறிக்கோளுக்கு இணக்கமானதாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உன்னதமான முன்னெடுப்பில் கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி பிரிவின் தலைவர் டாக்டர் பி சதீஷ் பிரதிநிதித்துவப்படுத்தும் மெட்ராஸ் வடக்கு ரோட்டரி கிளப் மற்றும் பே ஃபோர்ஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு ஜூலியன் கிரிஸ்டோபர் ஆகியோர் வழங்கும் ஒத்துழைப்புக்காக தனது மனமார்ந்த நன்றியை அவர்களுக்கு நான் தெரிவிக்கிறேன்.”
இந்த மொபைல் நலவாழ்வு கிளினிக் ஒரு மாதத்தில் ஏறக்குறைய 600 நபர்களுக்கு நோய் பாதிப்புகளை கண்டறிவதற்கான சோதனைகளை செய்வதற்கு 12 முகாம்களை ஒவ்வொரு மாதமும் நடத்தும். சென்னை மாநகர பகுதிகளில் பிரதானமாக செயல்படவிருக்கும் இந்த கிளினிக் இதைச்சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் தனது சேவைகளை விரிவுபடுத்தும்.