அதிவேக உயிர்காப்பு பதில்வினைக்காக இந்தியாவின் முதல் ‘இதய அதிர்ச்சி சிகிச்சை குழு’-ஐ அறிமுகம் செய்யும் வடபழனி, காவேரி மருத்துவமனை

அதிவேக உயிர்காப்பு பதில்வினைக்காக இந்தியாவின் முதல் ‘இதய அதிர்ச்சி சிகிச்சை குழு’-ஐ அறிமுகம் செய்யும் வடபழனி, காவேரி மருத்துவமனை

 

சென்னை, செப்டம்பர் 26, 2024: உயர்சிகிச்சைக்கு புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை – வடபழனி இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடங்கப்படும் நிகழ்வை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது; இதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சை பராமரிப்பில் ஒரு புதிய தரஅளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது. தீவிரமான சீர்பிறழ்வுகளை தொடர்ந்து இதயத்தம்பம்/இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரைவான, ஒருங்கிணைக்கப்பட்ட இடையீட்டு சிகிச்சையை வழங்குவதற்கென இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் உயிரிழப்பிற்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இது நிகழாமல் தடுப்பதே இந்த புதுமையான நடவடிக்கைக்கான காரணமாகும்.

 

ஒரு பிரத்யேக ஹெல்ப்லைன் வழியாக இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவின் சேவையை அணுகிப்பெற முடியும். நோயாளிகள், நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவமனையோடு தொடர்புக்கான ஒற்றை முனையாக இந்த ஹெல்ப்லைன் செயல்படும். பல்வேறு துறைகளை தொடர்பு கொள்வதற்கான அவசியத்தை நீக்குவதன் வழியாக உயிருக்கு ஆபத்தான முக்கியமான தருணங்களில் தாமதமின்றி உயிர் காக்கும் இடையீட்டு சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படுவதை இக்குழு உறுதி செய்யும்.

 

இந்த முன்னெடுப்பின் தனித்துவமான அம்சம் என்பது, வழக்கமான மூன்றாம் நிலை சேவைகள் என்பதையும் கடந்து மிகவும் பிரத்யேகமான உயர் மருத்துவ சிகிச்சையான நான்காம் நிலை பராமரிப்பை வழங்குவதற்கான ஏற்பாடாகும். நான்காம் நிலை சிகிச்சை பராமரிப்பில் அரிதான மற்றும் சிக்கலான செயல்முறைகள் போன்ற மேம்பட்ட சிகிச்சைகள், இதய அறுவைசிகிச்சை மற்றும் இதயமாற்று சிகிச்சை போன்ற பிரிவுகளில் தனிச்சிறப்பான நிபுணத்துவம் ஆகியவை உள்ளடங்கும். காவேரி மருத்துவமனை போன்ற சிறப்பு மையங்களில் வழங்கப்படும் இத்தகைய அளவிலான பராமரிப்பு, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளின் நிலைமையை சீராக்க மெக்கானிக்கல் சர்குலேட்டரி சப்போர்ட் (MCS) சாதனங்களை ஒருங்கிணைக்கிறது மற்றும் இச்சேவையானது 24/7 அடிப்படையில் எப்போதும் கிடைக்கப்பெறுகிறது.

 

இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவில் இதய சிகிச்சை மருத்துவர்கள், இதய அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் வல்லுநர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவர்கள் உட்பட பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுகின்றனர். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் சாத்தியமுள்ள மிகச்சிறந்த சிகிச்சையை உடனடியாக வழங்குவதற்கு இவர்கள் ஒருங்கிணைந்து ஒத்துழைப்புடன் இயங்குகின்றனர். சிகிச்சையளிக்கப்படாத இதய அதிர்ச்சி நிகழ்வானது உயிரிழப்பிற்கான இடர்வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது என்பதால் இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை இன்றியமையாததாகும்.

 

இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடக்க நிகழ்விற்கு தமிழ்நாடு மாநிலத்தின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு. மா சுப்ரமணியன் தலைமை வகித்தார். ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி மையத்தின் இதய பராமரிப்பு மையத்தின் தலைவர் & இயக்குநர் பேராசிரியர் எஸ். தணிகாசலம் மற்றும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்வின்போது உரையாற்றிய பேராசிரியர் எஸ். தணிகாசலம், இச்சேவையின் இன்றியமையாத முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “இதய அதிர்ச்சி என்பது உடனடியாக ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை பராமரிப்பு தேவைப்படும் ஒரு மருத்துவ அவசரநிலை நேர்வாகும். கால தாமதமின்றி சரியான இடையீட்டு நடவடிக்கையை மேற்கொள்வதன் வழியாக உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பலரின் உயிர்கள் காப்பாற்றப்படுவதை காவேரி மருத்துவமனையின் இதய அதிர்ச்சி குழு உறுதி செய்யும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் & செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “இதய அதிர்ச்சிக்கான சிகிச்சை குழுவை அறிமுகம் செய்திருப்பதன் வழியாக இதயம் சார்ந்த அவசர நிலைகளை எதிர்கொள்ளும் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை மேலாண்மையை நாங்கள் மறுவரையறை செய்கிறோம். எமது பிரத்யேக ஹெல்ப்லைன், நிபுணர்களின் பராமரிப்பிற்கு உடனடி அணுகுவசதி கிடைப்பதை ஏதுவாக்கும். உரிய நேரத்திற்குள் உயிர் காக்கும் இடையீட்டு சிகிச்சைகள் நோயாளிகளுக்கு கிடைப்பதை இது உறுதி செய்யும். இதய பராமரிப்பில் புதிய தரநிலையை நிறுவும் இந்த முன்னெடுப்பு நடவடிக்கை, கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் இதயத்தம்ப பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பு விகிதங்களை நிச்சயமாக குறைக்கும்” என்று குறிப்பிட்டார்.

 

சர்வதேச அளவிலான சிறந்த நடைமுறைகளை அடித்தளமாகக் கொண்டு இயங்கும் காவேரி மருத்துவமனையின் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு மாதிரி, எக்மோ, இம்பெல்லா மற்றும் LVAD சாதனங்கள் போன்ற பொறியியல் சார்ந்த இரத்த சுழற்சி ஆதரவு சாதனங்கள் தேவைப்படும் நோயாளிகளின் சிக்கலான பாதிப்புகளை கையாள்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தனிச்சிறப்பான திறன்களை ஒருங்கிணைக்கிறது. இத்தகைய இடையீட்டு நடவடிக்கைகள், இதயமாற்று சிகிச்சை போன்ற செயல்முறைகளுக்கு நோயாளிகளை தயார் செய்கிற அல்லது அதற்கு பிறகு அவர்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு ஆதரவளிக்கின்றன.

 

யுஎஸ்ஏ-ல் நேஷனல் கார்டியோஜெனிக் ஷாக் இனிஷியேட்டிவ் (NSCI) என்ற திட்டத்தின் வெற்றியால் உத்வேகம் பெற்றிருக்கும் காவேரி மருத்துவமனை வடபழனி, இந்தியாவில் இவ்வகையினத்தில் முதன் முறையாக இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவை நிறுவியிருக்கிறது. சர்வதேச நெறிமுறைகளின் அடிப்படையில் இதய இரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர், இதயவியல் மருத்துவர் மற்றும் இதயவியல் சார்ந்த மயக்கவியல் நிபுணர் உட்பட குறைந்தபட்சம் மூன்று மருத்துவர்களை உள்ளடக்கியதாக இக்குழு இயங்கும். அத்துடன் எகோ கார்டியோகிராஃபி மற்றும் உறுப்பு வழி செலுத்தலில் பயிற்சி பெற்ற மருத்துவர் உதவியாளரின் ஆதரவும் இக்குழுவிற்கு இருக்கும்.

 

இதய அதிர்ச்சி எச்சரிக்கை நெறிமுறையின் கீழ் காவேரி குழுமத்தைச் சேர்ந்த மருத்துவமனைகள் மற்றும் பரிந்துரைப்பு செய்யும் பிற மருத்துவ மையங்களின் அவசரநிலை சிகிச்சை குழுக்களோடு நெருங்கிய ஒருங்கிணைப்புடன் இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவினர் செயல்படுவார்கள். இதய அதிர்ச்சி எச்சரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நோயாளியின் முதன்மை இதயவியல் நிபுணர் உட்பட அனைத்து நிபுணர்களும், ஒரு பிரத்யேக ஆன்லைன் குழுவின் வழியாக ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். நோயாளியின் சிகிச்சை காலம் முழுவதிலும் மற்றும் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை நிகழ்நேர தகவல் பரிமாற்றம் மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றை இக்குழுவினர் உறுதி செய்வார்கள்.

 

ஒரு பிரத்யேக மருத்துவர், நோயாளியின் சிகிச்சையை வழிநடத்துவார்; பரிந்துரைப்பு மையத்தில் அல்லது காவேரி வடபழனியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இதய அதிர்ச்சி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக மாற்றுவது மற்றும் MCS பொருத்துதல் உட்பட அதிக பயனளிக்கும் இடையீட்டு நடவடிக்கைகளை தீர்மானிக்க இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவினரோடு நெருக்கமாக அவர் செயலாற்றுவார்.

 

அவசரநிலை மருத்துவச் சேவைகள் வழங்குவதில் காவேரி மருத்துவமனை தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது; நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளில் உயர் தரநிலையை நிறுவுவதற்காக மேம்பட்ட பராமரிப்பு மாடல்களையும் மற்றும் உயிர் காக்கும் தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து இம்மருத்துவமனை அறிமுகம் செய்து வருகிறது.

Faceinews.com