வடபழனி காவேரி மருத்துவமனையில் 4 மாத பச்சிளம் குழந்தைக்கு வெற்றிகர கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை
சென்னை: 3 ஏப்ரல் 2025: நான்கு மாதங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வடபழனி காவேரி மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான உடல்நலக் காப்பீடு திட்டத்தின் கீழ் கட்டணமின்றி முற்றிலும் இலவசமாகவும், வெற்றிகரமாகவும் செய்திருக்கிறது. குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்யும் திறன்கொண்ட தமிழ்நாட்டின் வெகுசில மருத்துவ மையங்களுள் ஒன்றான காவேரி மருத்துவமனையில் இந்த மருத்துவ செயல்முறை அதன் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் குழுவால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
கல்லீரல் செயலிழப்பு, கடுமையான மஞ்சள் காமாலை ஆகிய பாதிப்புகளுக்கு வழிவகுத்த ஒரு அரிதான மரபணு கோளாறு இந்த குழந்தைக்கு இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வடபழனி காவேரி மருத்துவமனைக்கு 3.5 கிலோ. உடல்எடை கொண்ட இக்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்டிருந்தது. குழந்தையின் மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்ட இம்மருத்துவமனை, தமிழ்நாடு முதலமைச்சரின் உடல்நலக் காப்பீடு திட்டத்திலிருந்து அனுமதி உட்பட, தேவையான ஒப்புதல்களை விரைவாகப் பெற்று, 10 நாட்களுக்குள் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது.
தாயின் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக, இப்பச்சிளம் குழந்தையின் தாய் கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தார். சுமார் 110 கிராம் எடையுள்ள தாயின் கல்லீரலின் ஒரு பகுதியானது, அவரது குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றிப் பொருத்தப்பட்டது. இம்மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் பல்வேறு உறுப்புகளுக்கான உறுப்புமாற்று அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். சுவாமிநாதன் சம்மந்தம் தலைமையிலான மருத்துவர்கள் குழு, ஒரு குறைவான ஊடுருவல் அணுகுமுறையான லேப்ராஸ்கோப்பிக் உதவியுடன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து, இக்குழந்தையின் தாய் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது தாயும், குழந்தையும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.
ஒரு பச்சிளம் குழந்தைக்கு செய்யப்பட்டிருக்கும் இந்த சவால்மிக்க செயல்முறையின் வெற்றி, வடபழனி காவேரி மருத்துவமனையில் இயங்கும் நிபுணர்களின் குழுவால்தான் சாத்தியமாகியிருக்கிறது. குழந்தைகளுக்கான தீவிரசிகிச்சை நிபுணர்கள், குழந்தைகளுக்கான மயக்க மருந்தியல் வல்லுனர்கள், கல்லீரல் உறுப்புமாற்று அறுவைசிகிச்சையாளர்கள், குழந்தைகளுக்கான கல்லீரலியல் மருத்துவர்கள், கதிர்வீச்சியல் மற்றும் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர்கள் என பல்வேறு பிரிவுகளின் சிறப்பு நிபுணர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை என்பது, அதுவும் குறிப்பாக 4 கிலோ எடை மற்றும் 6 மாதங்கள் வயதிற்கு கீழ்ப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு செய்யப்படும்போது, கடுமையான சவால்களை அறுவைசிகிச்சை குழு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய பச்சிளம் குழந்தைகளில் இரத்தநாளங்கள் சிறியதாக, 2 மி.மீ அளவுள்ள தமனிகள் மற்றும் 3 மி.மீ. அளவுள்ள இரத்தநாளங்கள் இருப்பதால், அசாதாரண துல்லியமும், நிபுணத்துவமும் இச்சிகிச்சை செயல்முறையின் வெற்றிக்கு அவசியமாக இருக்கின்றன. குழந்தை மிகச்சிறியதாக இருந்ததன் காரணமாக 110 கிராம் எடையுள்ள தாயின் கல்லீரல் கூட கடும் சிரமத்துடன் இக்குழந்தைக்குப் பொருத்தப்பட்டது. உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய காரணம் இதைப்போலவே மிகவும் நெருக்கடியானது. நோய் எதிர்ப்பு ஒடுக்க சிகிச்சை முறையின் கீழ், குழந்தையின் உடல்நலத்தைக் கண்காணிக்கவும், மீண்டு இயல்புநிலைக்கு வரவும் தீவிரசிகிச்சை மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க செவிலியர் குழுவின் மிக கவனமான பராமரிப்பு தேவைப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உடல்நல காப்பீடு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பது வசதியற்ற குடும்பங்களுக்கு எந்த செலவும் இல்லாமல், மேம்பட்ட மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு வடபழனி காவேரி மருத்துவமனை கொண்டிருக்கும் திறனை சுட்டிக்காட்டுகிறது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு 20 நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இப்பச்சிளம் குழந்தை இப்போது தாய்ப்பால் அருந்தி சுறுசுறுப்பாக நலமுடன் இருக்கிறது. இதில் ஈடுபட்ட ஒட்டுமொத்த மருத்துவக் குழுவிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு வியத்தகு சாதனையாக இதை குறிப்பிடலாம்.
வடபழனி காவேரி மருத்துவமனையின் கல்லீரல் மற்றும் பல்வேறு உறுப்புகளுக்கான உறுப்புமாற்று அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். சுவாமிநாதன் சம்பந்தம் பேசுகையில், “இப்பச்சிளம் குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தான இந்த உறுப்புமாற்று செயல்முறையை வெற்றிகரமாக செய்ய முடிந்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம். குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சைக்கு மிகத்துல்லியமான அறுவைசிகிச்சை உத்திகளும் மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு மிகச்சிறந்த ஒருங்கிணைப்புள்ள பராமரிப்பு திட்டமும் அவசியம். இந்த வெற்றியினை சாத்தியமாக்குவதற்கு எங்களது குழுவினர் தளர்வின்றி, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியிருப்பது பெருமிதம் அளிக்கிறது.” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: “சிக்கலான மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதில் எமது மருத்துவமனையின் நிபுணத்துவத்தையும் மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளை சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நேர்த்தியாகப் பிரதிபலிக்கிறது, மேலும், சிகிச்சைக்கான நிதி சுமை இல்லாமல் அவர்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் சிகிச்சை பராமரிப்பை ஏழை எளிய குடும்பங்களுக்கு பெறுவதை உறுதி செய்வதில் தமிழ்நாடு முதலமைச்சரின் உடல்நலக் காப்பீடு திட்டம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.”
வடபழனி, காவேரி மருத்துவமனை, உறுப்புமாற்று சிகிச்சை, குழந்தைகளுக்கான உயிர்காப்பு சிகிச்சை, குறைந்த ஊடுருவல் உள்ள செயல்முறைகள் மீது சிறப்பு கவனத்துடன் நவீன மருத்துவ சேவையை வழங்குவதில் நிபுணத்துவம் மிக்க பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக இயங்கி வருகிறது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிக திறன்மிக்க மருத்துவ தொழில்முறை பணியாளர்களின் குழு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இம்மருத்துவமனை, நேர்த்தியான உடல்நலப் பராமரிப்பில் உயர் தரநிலைகளை தொடர்ந்து நிறுவி வருகிறது.